வேலூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் சேகர் (47). இவர் ஆயுதப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிப்புரிந்து வந்துள்ளார். மேலும், கடந்த 2 ஆண்டுகளாக விஸ்வ இந்து பரிஷத் அலுவலகத்திற்கு பாதுகாப்புப் பணியில் இருந்து வந்துள்ளார்.

வீடு கட்டுவதற்காக சுமார் 25 லட்சம் ரூபாய் வரை அவர் கடன் வாங்கியிருக்கிறார். வாழ்நாளில் ஒருமுறை கூட லஞ்சம் எதுவும் வாங்காத நேர்மையாக இறுதிவரை தன் பணியை சேவையாக செய்து வந்ததால் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் சேகர் பல நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது பாதுகாப்புப் பணியில் இருந்த சேகர், தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தனக்குத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் உடனே அருகிலிருந்த நபர்கள் மாம்பலம் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

இந்தத் தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சேகரின் பிரேதத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், சேகர் சுட்டுக்கொண்ட துப்பாக்கியை தடயவியல் துறை கைப்பற்றி ஆய்வு செய்துள்ளனர். தன்னுடைய இறப்புக்கு யாரும் காரணம் இல்லை என்றும் கடன் பிரச்னையால் தற்கொலை செய்து கொள்வதாகவும் கடிதம் எழுதிவிட்டு சேகர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

கடிதத்தைக் கைப்பற்றிய மாம்பலம் துணை ஆணையர் ஹரி கிரன் பிரசாத் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றார்.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104 மற்றும் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here